×

மியாட் மருத்துவமனை 24வது நிறுவன தின விழா: கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: மணப்பாக்கம் மியாட் இண்டர்நேஷனல் ஹெல்த் கேர் மருத்துவமனையின் 24ம் ஆண்டு நிறுவன தின விழா நேற்று மருத்துவமனை அரங்கத்தில் நடந்தது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் தலைமை வகித்தார். நிறுவனர் மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். விழாவில், இளைஞர் நலன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும், சினிமா தயாரிப்பாளருமான கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவமனையின் சேவைகளை பாராட்டி பேசினார்.

அவர் பேசும்போது ``இந்த மருத்துவமனை மிகவும் ரம்யமான சுகாதார சூழலில் அமைந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகின்றனர். மருத்துவம் பற்றியோ சிகிச்சை பற்றியோ எனக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், மருத்துவர்கள் காலை முதல் மாலை வரை சலிப்பின்றி பணியாற்றுவது பாராட்டத்தக்கது. எனது அடுத்த படைப்பு. இந்த மருத்துவமனை, மருத்துவர்கள் சார்ந்ததாக இருக்கும். 40 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது, 1000 படுக்கை வசதிகள், பல்துறைகளுடன் சிறப்பாக செயல்படுவது எளிதான காரியம் இல்லை. இதன் வளர்ச்சிக்கு மூல காரணம் நிறுவனர் மோகன்தாஸ். அவர், நோயாளிகளை கவனிக்கும் விதம் தாயுள்ளம் கொண்டது’’ என்றார்.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் பேசும்போது, ”இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்புக்கான மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் கோவிட் போன்ற அபாயகர நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2022ல் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக முழு உடல் சிடி ஸ்கேன் அறிமுகப்படுத்தப்பட்டது.  உலக தரம் வாய்ந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது’’ என்றார். விழாவில் சிறந்த மருத்துவ சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Tags : MIDDLE ,HOSPITAL ,INSTITUTION DAY ,Krithika Udayanidhi Stal , MIDDLE HOSPITAL 24TH INSTITUTION DAY CELEBRATION: Participation by Krithika Udayanidhi Stal
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...